Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 01 செப்டம்பர் (ஹி.ச.)
டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து மேட்டூருக்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி 12 மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். நடப்பாண்டில் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை.
கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்தது.
பின்னர், கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படவுள்ளது.
இதன்படி முதல்வர் விஜய் முதல் முறையாக தண்ணீர் திறந்து வைக்கிறார்.
டெல்டா பாசன நீர் திறப்புக்கு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறையும், ஜூன் மாதத்துக்கு முன்பாக 11 முறையும் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில், காலதாமதமாக 62-வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. அணையில் 85 முதல் 90 அடி வரை தண்ணீர் இருக்கும் போது 8 முறை திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்துக்கு ஜூன்
12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை முழுமையாக 29 முறை திறக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறப்பது இது 4-வது முறையாகும்.
இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,485 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 11,501 கன அடியாக உயர்ந்தது. 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 91.15 அடியாக உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN