தமிழகத்தில் இன்று முதல் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள 26 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று (செப்.1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக
Toll


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள 26 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று (செப்.1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 77 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 60 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. மீதமுள்ள 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் கட்டணத் திருத்தத்தின் அடிப்படையில் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி மற்றும் நத்தக்கரை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் வீரசோழபுரம், திருச்சி சமயபுரம், மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம், கரூர் மாவட்டத்தில் மனவாசி மற்றும் அரவக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

விக்கிரவாண்டியில் புதிய கட்டணம்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப் மற்றும் பயணிகள் வேன்களுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.160-ல் இருந்து ரூ.165 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,170-ல் இருந்து ரூ.3,300 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.190 ஆகவும், பலமுறை பயணத்திற்கான கட்டணம் ரூ.275-ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.5,545-ல் இருந்து ரூ.5,770 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாரி மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.370-ல் இருந்து ரூ.385 ஆகவும், பலமுறை பயணத்திற்கான கட்டணம் ரூ.555-ல் இருந்து ரூ.575 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.11,085-ல் இருந்து ரூ.11,545 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.595-ல் இருந்து ரூ.620 ஆகவும், பலமுறை பயணத்திற்கான கட்டணம் ரூ.890-ல் இருந்து ரூ.930 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.17,820-ல் இருந்து ரூ.18,555 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை பகுதியில் புதிய கட்டணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இங்கு கார், ஜீப் மற்றும் பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.70 ஆகவும், பலமுறை பயணக் கட்டணம் ரூ.105 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,125 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தனியார் வாகனங்களுக்கு சலுகை மாதாந்திர பாஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் சுமார் ரூ.350 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் திருத்தம் செய்யப்படுவது வழக்கமாகும். இதற்காக, பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீடு உள்ளிட்ட காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, சென்னை போரூர்–வானகரம், செங்கல்பட்டு பரனூர், செங்குன்றத்தை அடுத்த நல்லூர், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சில சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதமே கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், அங்கு தற்போது மீண்டும் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.

அதேவேளையில், பள்ளி வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தில் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ