Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணம், சாலை அமைப்பதற்கான செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளிலும் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் அல்லவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது சுங்கக் கட்டணமும் உயர்த்தப்படுவது பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் ஒன்றிய அரசு, ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்றும், தமிழக அரசு ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, பொதுமக்களின் பங்கேற்புடன் மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ