Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)
தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் தனது செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்துள்ளதால், இடைத்தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி கட்சிகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து, இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக ஏற்கனவே “கல்லாப்பெட்டி கூட்டணி” என வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து, “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என பெயர் மாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றுவிடலாம் என கனவு காண வேண்டாம் என்றும் முதலமைச்சர் விஜய்யை அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பிறகு, கூட்டத்தின் நோக்கம், பிரதமர் வேட்பாளர் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல், கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து தெரிவிக்கலாம் என கூறியிருப்பது “நரித்தனத்தின் வெளிப்பாடு” என அப்பாவு விமர்சித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை அன்றைய முதலமைச்சர் கலைஞர் எதிர்த்துப் போராடியதையும், அதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றையும் சட்டப்பேரவையில் கேலி செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தகைய வரலாற்றை கேலி செய்யும் வகையில் செயல்படும் தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவி தேவையா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி.ராமாராவ் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சரான சம்பவத்தை சுட்டிக்காட்டிய அப்பாவு, அதுபோன்று ஆதவ் அர்ஜுனா முதலமைச்சராகிவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் விஜய் அவரை தன்னுடன் லண்டனுக்கு அழைத்துச் செல்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P