Enter your Email Address to subscribe to our newsletters

திஸ்பூர் , 11 செப்டம்பர் (ஹி.ச.)
அசாம் மாநிலம்
கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் மற்றும் மரோங்கி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உணவு தேடி வருவது வழக்கம்.
இந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றின் கழுத்தில் பழைய டிராக்டர் டயர் ஒன்று எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டது.
நாளடைவில் டயர் இறுக்கமாகி, யானைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
டயருடன் யானை சுற்றித்திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அசாம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு மருத்துவக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் யானையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், மீட்புக் குழுவினர் யானையை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து யானைக்கு மயக்க மருந்து செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அதன் கழுத்தில் மிகவும் இறுக்கமாக சிக்கியிருந்த டிராக்டர் டயரை பாதுகாப்பாக வெட்டி அகற்றினர்.
டயர் அகற்றப்பட்டதை தொடர்ந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டது.
அர்ப்பணிப்புடன் செயல்பட்டு யானையை மீட்ட வனத்துறையினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA