Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காக சட்டப்பேரவையில் ரூ.14.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கால்வாய்கள் தூர்வாரப்படாததால், பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தென்னை மரங்கள் கருகும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்துடன் தொடர்பில்லாத உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி, பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, அலுவலக வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கேயே உணவு சமைக்கும் பணியிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால், விலை கொடுத்து தண்ணீரை வாங்கி தென்னை மரங்களுக்கு பாசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக கால்வாய்களை தூர்வாருவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், திருமூர்த்தி அணை நிரம்பி உபரி நீர் செல்லும் நிலை ஏற்பட்டால் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும், தற்போது பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் உப்பாறுக்கு தண்ணீர் திறக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
தாராபுரம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அதிகாரிகள் இந்த முயற்சியை கைவிடும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுத் தலைவர் பரமசிவம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam