Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகவும், கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கு செல்லும் சிலைகளை வேறு பகுதிகளுக்கு ஏன் மாற்றக்கூடாது என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, சிலைகளை வேறு பகுதிகளுக்கு மாற்றும்போது சட்டம்-ஒழுங்கு, கூட்ட நெரிசல் மற்றும் மத ரீதியாக பதற்றமான பகுதிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்தது.
பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam