Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38), கடந்த 10-ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக செம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொடைரோடு அருகே சங்கிலி முருகனை கொலை செய்து, அவரது உடலை மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடலை அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர்.
பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததாக ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam