Enter your Email Address to subscribe to our newsletters

திரிபுரா, 16 செப்டம்பர் (ஹி.ச.)
திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டம் பனிசாகர் சோதனைச் சாவடியில் வடக்கு திரிபுரா போலீசார், அசாம் ரைபிள்ஸ் 8-வது பட்டாலியன் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) இணைந்து நடத்திய கூட்டு சோதனையில் சுமார் 50 கிலோ எடையுள்ள 5 லட்சம் யாபா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பனிசாகர் உட்கோட்ட காவல் அதிகாரி கிஷாலய் சிசோடியா கூறுகையில், போதைப்பொருள் ஏற்றி வரும் லாரி ஒன்று அசாமில் இருந்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் அதை துரத்திச் சென்று பனிசாகர் சோதனைச் சாவடியில் மடக்கிப் பிடித்தோம் என்று அவர் தெரிவித்தார்.
நிர்வாக நீதிபதியின் அனுமதி பெற்ற பிறகு வாகனத்தை சோதனை செய்தபோது, 5 லட்சம் யாபா மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நிகர எடை 50 கிலோவாகும், சந்தை மதிப்பு ரூ.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெரிய வணிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் என்று அவர் கூறினார்.
தடயவியல் அறிவியல் ஆய்வக (FSL) குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட பொருளை பரிசோதித்து அது யாபா போதை மாத்திரை தான் என்பதை உறுதி செய்தனர்.
நாங்கள் FSL குழுவினருக்கு தகவல் தெரிவித்தோம். FSL குழுவினர் வந்து சோதனைச் சாவடியில் பரிசோதித்து, அது போதைப்பொருள் தான் என்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தோம். ஓட்டுநர் என்ற ஒரு குற்றவாளியையும் கைது செய்தோம் என்று அவர் விளக்கினார்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதன் பிறகு மேல் விசாரணைக்காக காவலில் எடுக்க போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என்று சிசோடியா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு உதவிய பனிசாகர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மற்றும் வடக்கு திரிபுரா காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் ராய் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
திரிபுரா அரசின் 'நஷா முக்த் அபியான்' எனப்படும் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b