ரூ.6 லட்சம் காசோலை மோசடி- பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு 6 மாத சிறை
திருநெல்வேலி, 18 செப்டம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோடு, லக்ஸூரியா அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் கருப்பசாமி (48). திருநெல்வேலி மாநகரம் மற்றும் பாளையங்கோட்டை தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறா
Prison


திருநெல்வேலி, 18 செப்டம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோடு, லக்ஸூரியா அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் கருப்பசாமி (48). திருநெல்வேலி மாநகரம் மற்றும் பாளையங்கோட்டை தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் ரோட்டில் எம்.கே.எஸ். கிராபிக்ஸ் என்ற பெயரில் பிளக்ஸ் பிரிண்ட் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும், நெல்லை சந்திப்பு புளியந்தோப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் பொய்யாளி (45) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது.

தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி நண்பர் பொய்யாளியிடம் கருப்பசாமி ரூ.6 லட்சம் கடனாக கேட்டுள்ளார்.

இதையடுத்து, பொய்யாளி தனியார் நிதி நிறுவனத்தில் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

பின்னர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி ரூ.6 லட்சத்தை 1 சதவீத வட்டிக்கு கருப்பசாமியிடம் பொய்யாளி கடனாக கொடுத்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கருப்பசாமி வட்டித் தொகையை சரியாக கொடுத்து வந்த நிலையில், அதன் பிறகு பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இதனால் பணத்தை திருப்பித் தருமாறு பொய்யாளி கேட்டபோது, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கருப்பசாமி ரூ.6 லட்சத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்துள்ளார்.

அந்த காசோலையை பொய்யாளி தனது வங்கிக் கணக்கில் வசூலுக்காக செலுத்திய போது, கணக்கில் போதிய பணம் இல்லாமல் வங்கி நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டு மோசடி அரங்கேறியது.

இதுதொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி பொய்யாளி தரப்பில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கருப்பசாமி பணத்தை திருப்பித் தரவில்லை.

இதையடுத்து நெல்லையில் செயல்படும் மாற்றுமுறை ஆவணச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பொய்யாளி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கோப்பிற்கு எடுத்து விசாரித்த நீதிபதி பொன் மெலிசா, மோசடி குற்றத்தை உறுதி செய்து பா.ம.க. நிர்வாகி கருப்பசாமிக்கு 6 மாத கால சாதாரண சிறை தண்டனை விதித்து கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பொய்யாளிக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை 2 மாத காலத்திற்குள் கருப்பசாமி வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக அக்டோபர் 17ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN