Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 19 செப்டம்பர் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கடந்த சில நாட்களாக மாபெரும் வணிகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வரவழைக்கப்பட்டு கடைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
கண்காட்சியை சிறப்பிக்க பிரபல சின்னத்திரை நடிகை தாமரை செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.
இதற்கு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையும் ஆரம்பத்தில் கண்காட்சி நடத்த அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இன்று கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், திடீரென காவல்துறையினர் கண்காட்சிக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதனால் கடைகள் அமைப்பதற்கு முன்பணம் கொடுத்து, சரக்குகளை கொண்டு வந்து இறக்கியிருந்த வியாபாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, தொழிலாளர்களை வைத்து அரங்குகளை அமைத்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இந்த திடீர் ரத்துக்கு பின்னணியில் அப்பகுதியில் நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்களின் தலையீடு இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். கண்காட்சியால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என கருதி நிரந்தர கடை உரிமையாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே காவல்துறை அனுமதியை ரத்து செய்ததாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்கவும், மீண்டும் கண்காட்சி நடத்த அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b