Enter your Email Address to subscribe to our newsletters

குருகிராம், 02 செப்டம்பர் (ஹி.ச.)
ஹரியானா மாநிலத்தில் அமெரிக்க குடிமக்களை குறிவைத்து செயல்பட்டு வந்த போலி கால் சென்டரை குருகிராம் சைபர் கிரைம் மேற்கு காவல் நிலைய போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடித்து முடக்கியுள்ளனர்.
பாலம் விஹார், ஜே பிளாக்கில் வாடகை வீட்டில் இயங்கி வந்த இந்த மோசடி மையத்தில் இருந்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் போல நடித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், தொலைபேசியில் வைரஸ் தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணையமான எஃப்.டி.சி-யின் பெயரில் போலியான மிரட்டல்களை விடுத்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, எக்ஸ்-லைட் டயலர் மென்பொருள் மற்றும் ஆப்பிள் ஃபேஸ்டைம் மூலம் இயக்கப்படும் கட்டணமில்லா எண்களுக்கு அழைக்க வைத்து ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குழுத் தலைவர் பிரித்பால் சிங், முகமது ரிசான் அன்சாரி, சைதன்யா கோயல், மனிஷ், ஷாருக்கான் அன்சாரி, சஞ்சீவ் பாண்டே, சிவம், ஆதித்யா, தீபக் திரிவேதி, வருண் கௌதம் மற்றும் நீரஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலியான எஃப்.டி.சி கடிதங்களைக் காண்பித்து ஒவ்வொருவரிடமும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை மோசடி செய்துள்ளனர். இந்தப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது அல்லது பரிசு வவுச்சர்கள் மற்றும் கார்டு எண்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த கால் சென்டர் கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் இயங்கி வந்துள்ளது. இதில் பணியாற்றியவர்கள் கமிஷன் அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 9 மடிக்கணினிகள், 20 கைபேசிகள், மைக்ரோபோனுடன் கூடிய 2 ஹெட்செட்கள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக குருகிராம் சைபர் கிரைம் மேற்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் 318(4), 319 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 43, 66D, 72 மற்றும் 75 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b