Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
மும்பை காலாச்சௌக்கி பகுதியில் உள்ள மகாகணபதி பந்தல் அருகே இன்று அதிகாலை மின்சாரம் தாக்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாகணபதி பந்தலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், அதிகாலை சுமார் 2.40 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் உறவினரான கிஸ்மதி யாதவ் கூறுகையில்,
நாங்கள் அதிகாலை 2 மணியளவில் வந்து வரிசையில் நின்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாமா என்று யோசித்தோம். பின்னர் கூட்டம் குறையும் வரை கடைகளுக்கு அருகில் காத்திருக்க முடிவு செய்தோம் என்றார்.
அப்போது பந்தல் அருகே பொதுமக்கள் செல்லும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு கீழே விழுந்ததாகவும், அதில் இருந்து மின்சாரம் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது இரண்டு குழந்தைகளுக்கும் மின்சாரம் தாக்கியதாகவும், பந்தல் ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மும்பை தீயணைப்புப் படையினர் அதிகாலை 2.42 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனிடையே, BEST நிறுவனத்தின் முதற்கட்ட ஆய்வில், சம்பவம் நடைபெற்ற உடனேயே உள்ளூர் மின் பணியாளர் ஒருவர் வயரிங் மற்றும் மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (MCB) இணைப்புகளைத் துண்டித்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன, பந்தல் அமைப்பில் மின்சார பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து காலாச்சௌக்கி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், விழா பந்தல்களில் மின்சார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b