வாரணாசியில் என்கவுண்டர் - ரூ.30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட், 20 செப்டம்பர் (ஹி.ச.) தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் அமைப்பான திரிதியா பிரஸ்துதி கமிட்டி (T.P.C.) அமைப்பின் மூத்த நக்சல் தலைவர் கோபால் சிங் போக்தா என்ற பிரிஜேஷ் கஞ்சு, வாரணாசியில் உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் (ATS) நட
Jharkhand Naxal leader Brijesh Ganjhu shot dead in an encounter.


ஜார்க்கண்ட், 20 செப்டம்பர் (ஹி.ச.)

தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் அமைப்பான திரிதியா பிரஸ்துதி கமிட்டி (T.P.C.) அமைப்பின் மூத்த நக்சல் தலைவர் கோபால் சிங் போக்தா என்ற பிரிஜேஷ் கஞ்சு, வாரணாசியில் உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் (ATS) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிஜேஷ் கஞ்சுவை பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஜார்க்கண்ட் அரசு ரூ.25 லட்சமும், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ரூ.5 லட்சமும் சன்மானமாக அறிவித்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் போலீஸ் செய்தித் தொடர்பாளரும், ஐஜி (ஆபரேஷன்ஸ்) அதிகாரியுமான நரேந்திர சிங் கூறுகையில்,

கோபால் சிங் என்ற பிரிஜேஷ் கஞ்சு வாரணாசியில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஐஜி (STF) அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச ஏடிஎஸ் துணை கண்காணிப்பாளர் விபின் ராய் கூறியதாவது:

ரகசிய தகவலின் அடிப்படையில், ராம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லங்கா மைதான் பகுதியில் அதிகாலை போலீஸார் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது பிரிஜேஷ் கஞ்சு மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் டெங்ரா மோரிலிருந்து ராம்நகர் வழியாக முகல்சராய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் குதித்து போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் பிரிஜேஷ் கஞ்சு காயமடைந்தார்.

காயமடைந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சண்டையின்போது பிரிஜேஷ் கஞ்சு சுட்டதாகக் கூறப்படும் தோட்டாக்கள், ஏடிஎஸ் துணை கண்காணிப்பாளர் விபின் ராய் மற்றும் தலைமைக் காவலர் நிதேந்திர கிருஷ்ணா ஆகியோரின் குண்டு துளைக்காத உடைகளில் பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் இருவரும் காயமின்றி தப்பினர்.

தடை செய்யப்பட்ட டிபிசி அமைப்பின் முக்கிய தலைவராகக் கருதப்படும் பிரிஜேஷ் கஞ்சு, பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்பட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டிபிசி அமைப்பு மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து பிரிந்த குழுவாகக் கருதப்படுகிறது.

வாரணாசியில் பிரிஜேஷ் கஞ்சுவின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச ஏடிஎஸ் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாகவும், பின்னர் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

துப்பாக்கிச் சண்டை தொடர்பான சட்ட நடைமுறைகள் மற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b