காக்கிநாடா மாவட்டத்தில் கனமழை - அதிகாரிகளுக்கு பவன் கல்யாண் உத்தரவு
காக்கிநாடா , 24 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மாவட்ட கலெக்டர் ஹரேந்தர் பிரசாத்தை தொ
A


காக்கிநாடா , 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மாவட்ட கலெக்டர் ஹரேந்தர் பிரசாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மழை குறையும் வரை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகள், வெள்ளம் பாதிக்கக்கூடிய கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சராசரியாக 117.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் சாலைகளில் விழுந்த 15 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 1,885 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் என்றும், விழுந்த மரங்களை விரைந்து அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

ஏலேறு, தாண்டவா, பம்பா, சுப்பாரெட்டி சாகர் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

மழை குறைந்ததும் அதிகாரிகள் கள ஆய்வு செய்து பயிர் சேதத்தை துல்லியமாக கணக்கிட வேண்டும். சேத விவரங்களை அரசுக்கு அனுப்பி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் உத்தரவிட்டார்.

சொத்து சேதம் ஏற்பட்டவர்களுக்கும் விரைவாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தனது பித்தாபுரம் தொகுதியில் உள்ள சுத்தகட்டா ஓடை மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளப்பாதிப்பு பகுதிகளின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

உப்பாடா கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் குறித்து கேட்டறிந்த பவன் கல்யாண், வானிலை நிலைமை சீராகும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாத வகையில் கடுமையான எச்சரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் நிலைமை முழுமையாக சீராகும் வரை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA