3 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல் -17 வயது சிறுவனிடம் விசாரணை!
கடலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.) பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் தாயார், குழந்தையை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்
_


கடலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)

பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் தாயார், குழந்தையை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தச் சிறுவன் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தகவல் பரவியதையடுத்து பச்சையாங்குப்பம் பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் திரண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குழந்தைக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக துறைமுக காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J