8 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த புதிய யானை – பக்தர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை, 25 செப்டம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 8 வயதுடைய ஆண் யானை ஒன்று புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிராலால் என்ற யானையை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து வர
Nn


சென்னை, 25 செப்டம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 8 வயதுடைய ஆண் யானை ஒன்று புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிராலால் என்ற யானையை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயிலில் கடந்த 30 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை, கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தது. இதையடுத்து கடந்த 8 ஆண்டுகளாக கோயிலில் நடைபெற்ற முக்கிய விழாக்களில் யானை பங்கேற்காமல் இருந்தது.

1995-ம் ஆண்டு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ருக்கு, திருக்கார்த்திகை தீபம், சித்திரை வசந்த உற்சவம், பஞ்சப்பருவ உற்சவங்கள், ஆனி பிரம்மோற்சவம், ஆருத்ரா தரிசனம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விழாக்களில் பங்கேற்று வந்தது.

மேலும், தினமும் மாலை நேரத்தில் சம்பந்த விநாயகர் சன்னதிக்கு எதிரே நடைபெறும் தீபாராதனையின்போது ருக்கு யானை மண்டியிட்டு வணங்கி மூன்று முறை பிளிறும் காட்சியை காண்பதற்காக பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கமாக இருந்தது.

பின்னர் சம்பந்த விநாயகரை சுற்றி வந்து தனது இருப்பிடத்திற்கு ருக்கு சென்று விடும்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நாய் ஒன்று குரைத்ததில் மிரண்டு ஓடிய ருக்கு, அருகில் இருந்த இரும்புத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தது.

இதையடுத்து அதன் உடல் கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

ருக்கு யானை உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோயிலின் முக்கிய விழாக்களில் யானை பங்கேற்காதது ஆன்மிக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய யானையை கோயிலுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயதுடைய ஹிராலால் என்ற ஆண் யானை மினி லாரி மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்திற்கு யானை வந்தடைந்ததும், அதற்கு பட்டு வஸ்திரம் அணிவித்து, பூமாலை சூட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஆகம விதிகளின்படி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க திருமஞ்சன கோபுர வாயில் வழியாக யானை ஹிராலாலை திருக்கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இதையொட்டி குழந்தைகளுடன் குடும்பத்தினரும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருந்து புதிய யானையை ஆர்வத்துடன் பார்த்து, செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

சிறப்பு பூஜையில் திருக்கோயில் இணை ஆணையர் பரணிதரன், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஹிராலால் யானைக்கு பழங்களை வழங்கி வரவேற்றனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு புதிய யானையான ஹிராலால், அனுராதா சுப்பிரமணியன் சேவா டிரஸ்ட் சார்பில் உபயமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை சார்பில் இதுவரை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் என மொத்தம் 5 கோயில்களுக்கு யானைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இதில் 3 ஆண் யானைகளும், 2 பெண் யானைகளும் அடங்கும். இந்த யானைகளின் வயது 5 முதல் 13 வயதுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ