ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம்!
காஞ்சிபுரம், செப்டம்பர் 25 (ஹி.ச.) தமிழகத்தின் மாநில மரமான பனையை பாதுகாப்பதுடன், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தி நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சி
H


காஞ்சிபுரம், செப்டம்பர் 25 (ஹி.ச.)

தமிழகத்தின் மாநில மரமான பனையை பாதுகாப்பதுடன், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தி நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பனை விதைகளை நட்டு இந்தப் பணியை தொடங்கி வைத்தார்.

பனை விதைகள் நடுவதன் மூலம் நீர்நிலைகளின் கரைகளை பாதுகாப்பது, அரசு பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை பசுமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பை குறைத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துதல், பனை சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் பனைத் தொழில்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவையும் திட்டத்தின் நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழகத்தின் 37 மாவட்டங்களில் இந்தப் பணி நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சம் NSS மாணவர்கள் பங்கேற்று, மொத்தம் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர் .

குறிப்பாக தமிழகத்தில் உள்ள 100 கல்லூரிகளில் பனை விதை வங்கிகள் அமைக்கப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் பனை விதைகள் இவ்வங்கிகளில் சேமிக்கப்பட்டு, பின்னர் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவு செய்யப்பட உள்ளது.

நீர்நிலைகளின் கரைகள், அரசு காலியிடங்கள் உள்ளிட்ட பனை வளர்ப்புக்கு ஏற்ற பகுதிகள் இதற்காகத் தேர்வு செய்துள்ளது.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநில அளவிலான இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

Hindusthan Samachar / Durai.J