Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும், சென்னை மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, அந்நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடுவதில் ஏற்படும் தாமதத்துக்கு போதிய பணியாளர்கள் இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார். எனவே, காலியாக உள்ள மின் கணக்கீட்டாளர் மற்றும் வருவாய்ப் பிரிவு பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புவதே இதற்கான தீர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின்வாரியத்தில் உள்ள 7,590 மின் கணக்கீட்டாளர் பணியிடங்களில் 5,602 பணியிடங்கள், அதாவது 73.81 சதவீதம் காலியாக இருப்பதாகவும், வருவாய்ப் பிரிவையும் சேர்த்து மொத்தமுள்ள 14,804 பணியிடங்களில் 7,119 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், மின் கணக்கீட்டு ஆய்வாளர் நிலையில் உள்ள 3,976 பணியிடங்களில் 1,073 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காலியிடங்களை நிரப்பாமல் மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து ஒப்பந்தப் பணிமுறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை என அன்புமணி விமர்சித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை என மின்வாரியம் கூறினாலும், ஒப்பந்தங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற நடைமுறை தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், அதிலும் ஒரு பகுதி தனியார் மனிதவள நிறுவனங்களுக்கு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒப்பந்தப் பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒப்பந்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டு முறை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மின்சாரக் கணக்கீடு தொடர்பான 8,192 காலிப் பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பினால், குறைந்தபட்சம் 69 சதவீதம், அதாவது 5,652 வேலைவாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கிடைக்கும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
மின் கணக்கீட்டில் தவறு ஏற்பட்டால் நிரந்தரப் பணியாளர்களை பொறுப்பாக்க முடியும் என்றும், ஒப்பந்த ஊழியர்களிடம் பொறுப்புடைமை குறைவாக இருப்பதால் அதிகப்படியான மின் கட்டணம் வசூலிக்கப்படும் பிரச்சினை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்படுவர் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதி தங்களது உயிர்மூச்சுக் கொள்கை என முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக தொடர்ந்து கூறி வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களை ஒழித்துவிட்டு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பது தான் சமூகநீதியா எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவைக் கைவிட்டு, மின்வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P