Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 26 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்தர் (56) சிக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. உயிரிழந்த ஆர்தரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b