ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் 5 மணி நேரம் தீவிர விசாரணை
சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.) சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின
Gem Veeramani POCSO case


சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரிடம் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த போக்சோ வழக்கில், தொழிலதிபர் எம். வீரமணி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி / எஸ்.டி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார் கடந்த 2024-ம் ஆண்டிலேயே இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக கூறியிருந்தார்.

ஆனால் அந்த புகாரின் மீது அப்போதைய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி காவல்துறை இந்த வழக்கை முடிக்க முயன்றதாகவும், அதனை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், ஐ.ஜி. ஜி. தேன்மொழி தலைமையில் முழுக்க முழுக்க பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட நான்கு பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்காமல் இருக்க சுமார் 70 கோடி ரூபாய் வரை அதிகாரிகளுக்கு பேரம் பேசி செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் உட்பட நான்கு அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் முதலில் வீடியோ ஆதாரங்களை காவல்துறையிடம் வழங்கியவரும், புகார்தாரருமான ரஞ்சன் குமாரிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

சில தகவல்களின்படி இந்த விசாரணை விடிய விடிய ஒன்பது மணி நேரம் வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, 2024-ல் புகார் அளித்த போது என்ன நடந்தது, வீடியோ ஆதாரங்களை எங்கிருந்து பெற்றார், அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பியதற்கான காரணம் என்ன, புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் யார் யார் என்பது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இந்த விசாரணையின் மூலம் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b