Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த 2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நிர்மலா தேவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற மனு ஆகியவை நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, தனது கட்சிக்காரர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கார்த்திகேயன், இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b