Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 செப்டம்பர் (ஹி.ச.)
வரவிருக்கும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சோலாப்பூர் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 102 சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே இயக்க உள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு ரயில்கள் மும்பை, சென்னை, லாத்தூர், கோலாப்பூர் மற்றும் கலபுரகி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பண்டிகை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கு சீரான பயண வசதி ஏற்படுத்தப்படும்.
இதில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (சிஎஸ்எம்டி) மும்பை - சென்னை கடற்கரை வாராந்திர சிறப்பு ரயில் ஆறு முறை இயக்கப்படும். இந்த ரயில் அக்டோபர் 14 முதல் நவம்பர் 18 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் நள்ளிரவு 12.35 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.
மறுமார்க்கமாக சென்னை கடற்கரை - சிஎஸ்எம்டி மும்பை சிறப்பு ரயிலும் ஆறு முறை இயக்கப்படும். இது அக்டோபர் 15 முதல் நவம்பர் 19 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மும்பையை சென்றடையும்.
இந்த ரயில் தாதர், தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுண்ட், குர்துவாடி, சோலாப்பூர், கலபுரகி, வாடி, கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் சாலை, ஆதோனி, குண்டக்கல், கூட்டி, தாடிபத்திரி, எர்ரகுண்ட்லா, கடப்பா, ராஜம்பேட்டை, ரேணிகுண்டா, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மும்பை - லாத்தூர் இடையே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும். மும்பை - லாத்தூர் சிறப்பு ரயில் 13 முறை இயக்கப்பட உள்ளது. இது அக்டோபர் 13 முதல் நவம்பர் 24 வரை ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12.35 மணிக்கு சிஎஸ்எம்டி மும்பையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11.40 மணிக்கு லாத்தூரை சென்றடையும்.
மறுமார்க்கமாக லாத்தூர் - சிஎஸ்எம்டி மும்பை சிறப்பு ரயிலும் 13 முறை இயக்கப்படும். இது அதே காலகட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு லாத்தூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு மும்பையை வந்தடையும்.
இந்த சேவைகள் தாதர், தானே, கல்யாண், லோனாவாலா, புனே, உருளி, தவுண்ட், பிக்வான், ஜெயூர், குர்துவாடி, பார்ஷி டவுன், தாராசிவ் மற்றும் ஹரங்குல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும், கோலாப்பூர் - கலபுரகி இடையே வெள்ளிக்கிழமை தவிர்த்து தினசரி சிறப்பு சேவையாக 64 முறை ரயில்கள் இயக்கப்படும். கோலாப்பூர் - கலபுரகி சிறப்பு ரயில் 32 முறை இயக்கப்படும். இது அக்டோபர் 10 முதல் நவம்பர் 15 வரை வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் காலை 6.10 மணிக்கு கோலாப்பூரில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 4.10 மணிக்கு கலபுரகியை சென்றடையும்.
மறுமார்க்கமாக கலபுரகி - கோலாப்பூர் சிறப்பு ரயிலும் 32 முறை இயக்கப்படும். இது இதே காலகட்டத்தில் வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் மாலை 6.10 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.40 மணிக்கு கோலாப்பூரை சென்றடையும்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஹாத்கனங்கலே, ஜெயசிங்பூர், மிராஜ் சந்திப்பு, அராக், பெலாங்கி, சுல்கரே, கவாத்தே மகாங்கால், லங்கார்பேத், தால்கான், மசோபா தோங்கர்கான், ஜவாலே, வசுத், சங்கோலா, பந்தர்பூர், மோட்னிம்ப், குர்துவாடி சந்திப்பு, சோலாப்பூர் மற்றும் கலபுரகி சந்திப்பு (குல்பர்கா) ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, சிறப்பு கட்டணத்துடன், செப்டம்பர் 27 முதல் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள், ஐஆர்சிடிசி இணையதளம் (www.irctc.co.in) மற்றும் ரெயில் ஒன் செயலி ஆகியவற்றில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்க செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் நிற்கும் நேரம் உள்ளிட்ட விரிவான கால அட்டவணையை www.enquiry.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது ரெயில் ஒன் மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு (என்டிஇஎஸ்) செயலிகள் மூலமோ அறிந்து கொள்ளலாம்.
தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது உறவினர்களை சந்திக்கவும், முக்கிய இடங்களுக்கு பயணம் செய்யவும் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சோலாப்பூர் கோட்டம் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b