காங்கிரசின் இலக்கு காந்தி குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதுதான்- ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
நிலம்பூர் , 26 செப்டம்பர் (ஹி.ச.) கேரள மாநிலம் நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் எதிர்காலத்துக்காக நடைபெறும் அரசியல் போராட்டம் ‘காந்தி பரிவார்’ மற்றும் ‘சங் பரிவ
A


நிலம்பூர் , 26 செப்டம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலம் நிலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நாட்டின் எதிர்காலத்துக்காக நடைபெறும் அரசியல் போராட்டம் ‘காந்தி பரிவார்’ மற்றும் ‘சங் பரிவார்’ இடையிலானது என்று அவர் தெரிவித்தார்.

காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளதாக கூறிய ரேவந்த் ரெட்டி, அந்த குடும்பத்துக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க வேண்டும் என்பதே தனது எஞ்சிய அரசியல் இலக்கு என்றும் அவர் கூறினார்.

ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ரேவந்த் ரெட்டியின் பேச்சு தொடர்பான வீடியோவை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிர்ந்த அவர், காங்கிரசின் அரசியல் இலக்கு என்ன என்பது தற்போது வெளிப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்.

காந்தி குடும்பத்தை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதுதான் காங்கிரசின் முக்கிய நோக்கம் என்று பிரதீப் பண்டாரி கூறினார். தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு, ஜனநாயகம் போன்றவற்றைவிட குடும்ப அரசியலுக்கே காங்கிரஸ் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அவசரநிலை பிரகடனம், 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டியும் பிரதீப் பண்டாரி விமர்சனம் செய்தார்.

ரேவந்த் ரெட்டியின் கருத்தும், அதற்கு பா.ஜ.க. அளித்துள்ள பதிலும் தேசிய அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA