Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 26 செப்டம்பர் (ஹி.ச.)
தொடர் விடுமுறையை
முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். இதனால் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி சோதனைச் சாவடியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நாடுகாணி சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களின் வருகை அதிகரித்துள்ளதாலும், பசுமை வரி வசூல் செய்ய காலதாமதம் ஏற்படுவதாலும், சோதனைச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், பசுமை வரி வசூலை விரைவுபடுத்தவும் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b