Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 27 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் கிராமப்புறங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ‘பல்லெ பண்டுகா 3.0’ திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நெல்லூர் மாவட்டம் உதயகிரி தொகுதியில் உள்ள ராமாபுரத்தில் வருகிற
29-ந்தேதி நடைபெறுகிறது.
இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக மாநில அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியின் மூலம் கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, தூய்மை மற்றும் சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியின் வருகையை முன்னிட்டு ராமாபுரத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழா நடைபெறும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகளை நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஹிமான்ஷு சுக்லா மற்றும் உதயகிரி தொகுதி எம்.எல்.ஏ. காகர்லா சுரேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஏற்பாடுகளை குறைபாடின்றி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, விழாவில் பொதுமக்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வதற்காக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதயகிரி தொகுதியைச் சேர்ந்த ஜனசேனா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்கள் பங்கேற்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
வருகிற 29-ந்தேதி ராமாபுரத்தில் நடைபெறும் ‘பல்லெ பண்டுகா 3.0’ தொடக்க விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA