குரூப் 1 முதல்நிலைத் தேர்வு - தூத்துக்குடியில் 18 மையங்களில் 4,047 பேர் பங்கேற்பு
தூத்துக்குடி, 27 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (குரூப்-1 முதல்நிலைத் தேர்வு) இன்றுதமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாள
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு - தூத்துக்குடியில் 18 மையங்களில் 4,047 பேர் பங்கேற்பு


தூத்துக்குடி, 27 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (குரூப்-1 முதல்நிலைத் தேர்வு) இன்றுதமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.

துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் , உதவி ஆணையர் (வணிக வரி) உள்ளிட்ட 46 முக்கிய உயர் பதவிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை எழுதத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2.23 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஒரே கட்டமாக தமிழகத்தின் 38 மாவட்ட மையங்களில் உள்ள 754 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெற்றது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக மொத்தம் 5,143 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். 18 மையங்களில் 4,047 பேர் தேர்வை எழுதினர். 1,096 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 79 சதவீதம் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளதாகவும், 21 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை.

தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்கள் அனைவரும் காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பாளர்களின் கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, காலை சரியாக 8.59 மணிக்குத் தேர்வு மையங்களின் பிரதான நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டன.

இதனால் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b