Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 27 செப்டம்பர் (ஹி.ச.)
பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்தை தங்களது இணையதளங்களில் விற்பனை செய்த புகாரில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதமும், ஜியோமார்ட் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஜியோமார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் இணையதளங்களில் ‘சைக்ளோசினோன் களைக்கொல்லி’ என்ற பதிவு செய்யப்படாத வேளாண் ரசாயனப் பொருள் விற்பனை செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விளம்பரங்களும் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்,
அந்தப் பொருளில் உள்ள செயல்திறன் மிக்க மூலப்பொருளின் வேதியியல் பெயர் அல்லது அதன் கலவை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படாமல் சந்தைப்படுத்தப்பட்டதை கண்டறிந்தது.
இதையடுத்து, செப்டம்பர் 22-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட களைக்கொல்லி மருந்தின் விற்பனை மற்றும் விளம்பரத்தை உடனடியாக நிறுத்துமாறு 3 நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
மேலும், சட்ட விதிகளை மீறும் அல்லது நுகர்வோர் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் தங்களது தளங்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய சுய தணிக்கை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்த சுய தணிக்கை தொடர்பான அறிக்கைகளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA