ஃபரிதாபாத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி -9 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்பு
ஃபரிதாபாத், 28 செப்டம்பர் (ஹி.ச.) ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சீஹி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். குழந
ஃபரிதாபாத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி 9 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்பு


ஃபரிதாபாத், 28 செப்டம்பர் (ஹி.ச.)

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சீஹி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மீட்க முயன்றும் முடியாததால் உடனடியாக காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுமி, சுமார் 9 மணி நேரம் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை பத்திரமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டன்ட் குணால் திவாரி கூறுகையில்,

இந்த சம்பவம் குறித்த தகவல் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 7.45 மணிக்கு கிடைத்தது. தகவல் கிடைத்ததும் எங்கள் குழுவினர் இரவு 9.05 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படை, ஹரியானா மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில காவல்துறை, தீயணைப்புத் துறை, உத்தரப் பிரதேச மாநில காசியாபாத் குடிமைப் பாதுகாப்புப் படை, மருத்துவக் குழு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து கூட்டு மீட்புப் பணியை மேற்கொண்டனர்

என்று தெரிவித்தார்.

ஆழ்துளை கிணற்றின் அருகே இணையாக பள்ளம் தோண்டி குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் முயற்சி இரவு முழுவதும் தொடர்ந்தது. மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பால் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b