Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 செப்டம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை பகுதிகளில் உள்ள மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கடமலைக்குண்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து நம்பிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அறிவிப்பின் காரணமாக தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை பகுதிகளில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் உள்ளிட்ட 98-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மலைக்கிராம மக்களை வெளியேற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து, தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மக்களின் நிலம், வீடு, தொழில் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரைக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத் தொலைவில் உள்ள கடமலைக்குண்டுவில் போராட்டம் நடத்தி வரும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்த்திருப்பது, உச்சநீதிமன்ற விசாரணையில் அரசு தங்களை கைவிட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி தமிழக மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்ததாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியுள்ளார். தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மலைக்கிராம மக்களுக்கு அவர் செய்யும் நன்றி கடன் இதுதானா?” என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, மலைக்கிராம மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் முதலமைச்சர் கடமலைக்குண்டுவுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாளை நடைபெற உள்ள உச்சநீதிமன்ற விசாரணையில் மலைக்கிராம மக்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான வாதங்களை தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam