‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் – அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்கள் 7, 8, 11 மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்த 42 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்த
rajmohan


சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்கள் 7, 8, 11 மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிறந்த 42 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன.

முதலமைச்சர் விஜய் மதுரையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், குமார் ஆகியோர் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் குமார்,

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மட்டுமல்லாமல் இது ஒரு தங்க விழா என்றும், தாயின் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உருவாகும் உறவைப் போல, முதலமைச்சரின் உள்ளத்தில் இருந்து தொடங்கும் அற்புதமான உறவின் அடையாளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் ஒரு மாபெரும் திட்டம் என்றும், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என்றும் குறிப்பிட்டார். தங்கம் தீயில் கருகாமல் நிலைத்து நிற்பதை சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களில் தங்க மோதிரம் மிளிர வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாகக் கூறினார்.

வெளிப்படையான முறையில் டெண்டர் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுக்கே வழிகாட்டியாக இத்திட்டம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் குழந்தையை தூக்கிக் கொஞ்சியதும், தாயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் விளம்பரத்திற்காக அல்ல என்றும், இயல்பாகவே உள்ளத்தில் இருந்து வெளிப்படும் அன்பின் வெளிப்பாடு என்றும் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவம், பாதுகாப்பான தாய், பாதுகாப்பான குழந்தை என்ற நிலையை தமிழ்நாடு உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜேசிடி பிரபாகர்,

முதலமைச்சர் விஜய்யின் மனதிற்கு மிகவும் பிடித்த திட்டமாக ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அமைந்துள்ளதாகக் கூறினார். தேர்தல் நேரத்தில் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் வாக்குறுதிகளை முன்வைத்து கட்சிகள் வாக்கு சேகரிப்பதாகக் கூறிய அவர், இந்தத் தேர்தலில் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் விஜய், அதனை செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் முதலமைச்சரை ‘அண்ணா’ என அழைக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கு தானே தாய்மாமன் என்ற உணர்வுடன் மோதிரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். வீடுகளில் பிரசவம் மேற்கொள்வதை தவிர்த்து, அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இணையதளங்களில் உள்ள காணொளிகளைப் பார்த்து பிரசவம் மேற்கொள்ளும் நடைமுறைகள் இனி இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், வீடுகளில் பிரசவம் பார்ப்பதை தவிர்த்து கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான மருத்துவ வசதிகள் இருப்பதால், பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மோதிரங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

மேலும், ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மோதிரம் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என கேள்வி எழுப்புவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்லாமல் இருந்தாலே அந்த மோதிரம் பாதுகாப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நாரதரைப் போல செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது மகிழ்ச்சியாக பேசுவார்.

சபாநாயகர் நாரதர் அல்ல, சட்டப்பேரவையின் நாயகர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது காலத்தில் இருந்த நாரதரை குறிப்பிட்டு பேசியிருப்பார் என்று பதிலளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam