Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 செப்டம்பர் (ஹி.ச)
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கவும், தாய்-சேய் நலனை மேம்படுத்தவும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஜூன் 22, 2026 முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், 22 கேரட் (916 ஹால்மார்க் முத்திரை கொண்ட) 1 கிராம் தங்க மோதிரம் தலா ஒரு குழந்தைக்கு வீதம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் 44,167 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் நலத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இத்திட்டத்தின் முதற்கட்டமாக மொத்தம் 1,28,499 தங்க மோதிரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மோதிரங்களின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு தங்க மோதிரத்திலும் தனிப்பட்ட அடையாள எண் பொறிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் மோதிரங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும், பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்யவும் முடியும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும் கொள்முதல் பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b