ஒடிசா பருவமழை வெள்ள பாதிப்பு - கோராபுட்டில் நிவாரணப் பணிகளை முதல்வர் மோகன் சரண் மாஜி நேரில் ஆய்வு
ஒடிசா, 28 செப்டம்பர் (ஹி.ச.) ஒடிசா மாநிலத்தில் தொடர் பருவமழை காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 20 வட்டங்கள், ஒர
ஒடிசா பருவமழை வெள்ள பாதிப்பு - கோராபுட்டில் நிவாரணப் பணிகளை முதல்வர் மோகன் சரண் மாஜி நேரில் ஆய்வு


ஒடிசா, 28 செப்டம்பர் (ஹி.ச.)

ஒடிசா மாநிலத்தில் தொடர் பருவமழை காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 20 வட்டங்கள், ஒரு நகராட்சி மற்றும் ஒரு அறிவிக்கப்பட்ட பகுதி கவுன்சில் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பெத்னோடி மற்றும் படாசாஹி ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பெத்னோடி வட்டத்தில் படாலிபுரா, கலாமா உள்ளிட்ட கிராமங்களும், படாசாஹி வட்டத்தில் சாலகான், மனகோபிந்தாபூர், சந்தன்பூர், துர்காபூர், கெந்துடிஹா மற்றும் பாலபத்ரபூர் உள்ளிட்ட கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புதாபலங்கா நகரா பாலத்தில் இரண்டு முதல் மூன்று அடி வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பெத்னோடியிலிருந்து படாசாஹி மற்றும் மனத்ரியிலிருந்து பைசிங்கா செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து 10,373 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 89 நிவாரண முகாம்களும், உணவு வழங்குவதற்காக 72 இலவச சமையல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே உடாலா, கப்திபாடா, பாங்கிரிபோசி மற்றும் சரஸ்கானா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால், துண்டிக்கப்பட்ட சில சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தாகுர்முண்டா, கப்திபாடா, உடாலா, கோபாபந்துநகர், குந்தா, படாசாஹி மற்றும் பெத்னோடி ஆகிய ஏழு வட்டங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன், நீர்மட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இன்று கோராபுட் மாவட்டம், கோட்பாட் வட்டத்தில் உள்ள சண்டிலி பஞ்சாயத்துக்கு நேரில் சென்றார்.

அவருடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி உடனிருந்தார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்து முதல்வர் கலந்துரையாடியதோடு, நிவாரண முகாம்களில் வழங்கப்படும் சமைத்த உணவின் தரத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b