Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்குடி, 28 செப்டம்பர் (ஹி.ச.)
வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக கைது செய்து பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இன்று காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத் திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் இதுவரை நடத்தியிராத SIR என்ற புதிய நடைமுறை மூலம், மூன்று சுற்றுகளாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல் சுற்று: 65 லட்சம் பேர்
இரண்டாவது சுற்று: 6 கோடியே 50 லட்சம் பேர்
மூன்றாவது சுற்று:6 கோடியே 10 லட்சம் பேர்
ஒட்டுமொதாக 20 மாநிலங்களில் 13 கோடியே 30 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் அல்லது இறந்தோரை நீக்குவது வழக்கம் என்றாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்களை நீக்கியது மாபெரும் கிரிமினல் குற்றமாகும்.
மேற்கு வங்கத்தில் மட்டும் நீக்கப்பட்டவர்களில் 22 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். சட்டத்தில் இதற்கு இடமில்லை என்ற நிலையிலும், உச்ச நீதிமன்ற தலையீட்டால் ஓய்வுபெற்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி திரு. சிவஞானம் உள்ளிட்ட நீதிபதிகள் ஆறு மாதங்கள் விசாரணை நடத்தியும், விரக்தியின் காரணமாகப் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.
இந்த 6 மாதங்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மேல்முறையீடுகள் மட்டுமே முடிவுக்கு வந்தன. இதில் 91 சதவீத மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதிலிருந்தே தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய தவறையும் பிழையையும் செய்துள்ளது என்பது தெளிவாகிறது. மீதமுள்ள 21 லட்சம் மேல்முறையீடுகளை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும்; அதற்குள் மூன்று தேர்தல்கள் முடிந்துவிடும்.
டெல்லியில் கடந்த தேர்தலில் வாக்களித்த 2.7 லட்சம் பேர் 24 வார்டுகளில் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 97 வயதான கணித மேதை சி.என்.ஆர். ராவ் மற்றும் முன்னாள் வேட்பாளர்கள் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும், பெயர்கள் நீக்கப்பட்டும் உள்ளன.
படிவம் 6 (Form 6) நிரப்புவதில் பாட்டன், பாட்டி பிறந்த தேதி, அவர்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்கள் என்பது போன்ற தேவையற்ற மற்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
சமூக ஆர்வலர் அஞ்சலி பார்கவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்ட கேள்விக்கு, SIR முறையை அமல்படுத்துவது குறித்து எந்தவிதமான கோப்புகளோ (Files) அல்லது எழுத்துப்பூர்வ முடிவுகளோ இல்லை எனத் தேர்தல் ஆணையச் செயலகம் பதில் அளித்துள்ளது.
டி.என். சேஷன் காலத்திலிருந்து மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒன்றாக அமர்ந்து, பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுப்பதே விதி. ஆனால், மற்ற இரு ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி (10 மாதங்களில் 14 முறை எதிர்த்துள்ளனர்), தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கை மற்றும் கோரிக்கைகள்:
1. SIR முறையை உடனடியாக நாடு முழுவதும் நிறுத்த வேண்டும்.
2. நீக்கப்பட்ட 13.30 கோடி வாக்காளர்களையும் உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
3. வழக்கமான ஆண்டு தோறும் நடைபெறும் சரிபார்ப்பு முறையை (Jan 1 Revision) மட்டுமே பின்பற்ற வேண்டும்.
ராகுல் காந்தியின் கோரிக்கையின்படி, ஞானேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூடவுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கூட்டமும் கூடி அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b