Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசியல் சுயலாபத்துக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவியை ராஜினாமா செய்பவர்கள், மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் செலவை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்றும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். காசி ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் செலவை வசூலிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும், இது நீதிமன்றத்தின் வேலை இல்லை, சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் பணி என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது.
அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று கண்டனம் தெரிவித்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும் இந்த அபராதத் தொகையை நான்கு வார காலத்திற்குள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அந்த தொகையை வசூலிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b