Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 செப்டம்பர் (ஹி.ச.)
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் சதர் பஜார் - நபி கரீம் பகுதியில் நடைபெற்ற சோபா யாத்திரையின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு நபர்கள், இன்று காலை மத்திய டெல்லியில் டெல்லி போலீஸ் சிறப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் முகேஷ் என்கிற சின்னு மற்றும் ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஆகாஷ் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் என போலீஸாரால் அறிவிக்கப்பட்டவர்.
இருவருக்கும் காலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பஹர்கஞ்ச் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக சிறப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்களை பிடிக்க போலீஸார் வலைவிரித்தனர்.
புது டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கர்னைல் சிங் ஸ்டேடியம் அருகே சந்தேக நபர்களை போலீஸார் வழிமறித்தபோது, அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் காயமடைந்து பின்னர் கைது செய்யப்பட்டனர்.
சதர் பஜார் - நபி கரீம் சோபா யாத்திரையின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b