Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 03 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் பூபதி (45). இவர் சிமெண்ட் செங்கல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுஜிதாஸ்ரீ (31). இவர்களுக்கு 13 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தனது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்ததாகவும், ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப் பாலம் பகுதியில் மர்ம நபர்கள் வழிமறித்து தனது கணவரை வெட்டிக் கொலை செய்ததாகவும் சுஜிதாஸ்ரீ ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், தன்னிடம் இருந்த சுமார் 10 பவுன் நகையையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
தகவலின் பேரில் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
பூபதி காருக்குள் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாததும், காரில் ரத்தக்கறை காணப்படாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், சுஜிதாஸ்ரீக்கு எந்தவித காயமும் ஏற்படாததும் விசாரணையை தீவிரப்படுத்தியது.
இதையடுத்து சுஜிதாஸ்ரீ வீட்டிற்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு ரத்தக்கறை மற்றும் சம்பவம் நடைபெற்றதற்கான தடயங்கள் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சுஜிதாஸ்ரீயிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுஜிதாஸ்ரீக்கும் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த சக்திவேலின் மகனும், திருமணமாகாத ஐ.டி. ஊழியருமான சந்தோஷ்ராஜ் (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் பூபதிக்கு தெரியவந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட சுஜிதாஸ்ரீ மற்றும் சந்தோஷ்ராஜ் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று சந்தோஷ்ராஜை வீட்டிற்கு வரவழைத்த சுஜிதாஸ்ரீ, இருவரும் சேர்ந்து பூபதியை கீழே தள்ளி தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பூபதி எதிர்த்து போராடியதால், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் அவரை தாக்கியதாகவும், சந்தோஷ்ராஜும் கத்தியால் சரமாரியாக வெட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசில் சிக்காமல் இருப்பதற்காக இருவரும் திட்டமிட்டு நாடகமாடியதாக கூறப்படுகிறது. அதிகாலை வரை காத்திருந்த அவர்கள், பூபதியின் உடலை காரின் முன்சீட்டில் வைத்து ஆட்டுக்காரனூர் அருகே சரபங்கா ஆற்றுப் பாலம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், சுஜிதாஸ்ரீ தனது நகைகளை கழற்றி சந்தோஷ்ராஜிடம் கொடுத்துவிட்டு, மர்ம நபர்கள் வழிமறித்து கணவரை கொலை செய்து தனது நகைகளை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜை கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நகைக்காக மர்ம நபர்கள் தொழிலதிபரை கொலை செய்ததாக கூறி போலீசாரை திசைதிருப்ப முயன்ற நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த சம்பவம் அம்பலமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam