Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.)
மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியம் மற்றும் தவறான கல்விக் கொள்கைகளால் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84 ஆயிரத்து 318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதில் மூடப்பட்ட பள்ளிகளில் 93 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 78 ஆயிரத்து 502 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 15 ஆயிரத்து 461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக நீதி மற்றும் பொதுக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை சீரழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு ஏற்கவில்லை என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்க வேண்டியதாக கூறப்படும் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மட்டும் ரூ.714 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த பள்ளிக் கல்வி நிதியை நிறுத்தி வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அரசியல் செய்வதாகவும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
குறைவான மாணவர்கள் மற்றும் ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட காரணங்களைக் கூறி, பள்ளிகளை சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை மூடும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட்டு, பொதுக் கல்வியை பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam