Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அடுத்தடுத்து 9 கடைகள் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் கடைகளில் இருந்த பொருட்கள், பணம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பெரும் வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் இன்று மீமிசல் பகுதி முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக மீமிசல் பேருந்து நிலையம், பிரதான கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட வணிகர்களும் பொதுமக்களும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b