வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் -நீர்வழிப்பாதையை முழுமையாக மீட்க கோரிக்கை
திருப்பத்தூர், 30 செப்டம்பர் (ஹி.ச .) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையை ஒட்டியுள்ள நீர்வழிப் பாதை மற்றும் ஓடை புறம்போக்கு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி
வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் -நீர்வழிப்பாதையை முழுமையாக மீட்க கோரிக்கை


திருப்பத்தூர், 30 செப்டம்பர் (ஹி.ச .)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையை ஒட்டியுள்ள நீர்வழிப் பாதை மற்றும் ஓடை புறம்போக்கு பகுதிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

இது தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில்,

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழிப் பாதையை மீட்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த சத்துணவுக் கூடம் ஒன்று இடித்து அகற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த கட்டிடம் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டிடங்கள் அருகில் வந்ததும் பணி நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு சிலருக்கு மட்டும் சாதகமாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நீர்வழிப் பாதையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நீர்வழிப் பாதையை முழுமையாக மீட்டெடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால், அதிகாரிகள் எந்தவித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b