பெண்கள் பாதுகாப்பு விவகாரம் - ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி, 30 செப்டம்பர் (ஹி.ச.) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியமான என்.சி.ஆர். பகுதியில் செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவைகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, ஆதித்யா சேகல் என்பவர் டெல்லி உய
Judgement


புதுடெல்லி, 30 செப்டம்பர் (ஹி.ச.)

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியமான என்.சி.ஆர். பகுதியில் செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவைகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, ஆதித்யா சேகல் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குறிப்பாக பெண்கள் தனியாக டாக்சிகளில் பயணிக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை முறையாக பரிசோதிப்பதற்கான நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், செயலியில் முன்பதிவு செய்யும்போது காட்டப்படும் ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் விவரங்களே, பயணியை அழைத்துச் செல்ல வரும் ஓட்டுநர் மற்றும் வாகனத்துடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள ஓட்டுநர் அல்லது வாகனத்துக்கு பதிலாக அங்கீகரிக்கப்படாத வகையில் வேறு ஓட்டுநர் அல்லது வாகனம் மாற்றப்பட்டிருந்தால், பயணிகள் எவ்விதக் கட்டணமும் அல்லது அபராதமும் இன்றி அந்த சவாரியை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை பாதுகாப்பு விதிமீறல்களாகப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

மேலும், அவசரகாலத்தில் பெண்கள் பயன்படுத்தும் எஸ்.ஓ.எஸ். எச்சரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பயணியின் முன்பதிவு விவரங்கள், ஓட்டுநரின் அடையாள விவரங்கள், வாகனப் பதிவு எண் மற்றும் நிகழ்நேர இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை அவசரகால மீட்புப் பணியாளர்களுடன் பகிரும் வகையில் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுதவிர, தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண் ஓட்டுநர்களுக்கென தனி குழுக்களை உருவாக்கி, பெண் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களை ஒதுக்கும் வகையில் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பொதுநல மனு, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், செயலி அடிப்படையில் வாகனங்களை இயக்கும் தனியார் நிறுவனங்களையும் உரிய பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து குறிப்பிட்டனர்.

இதையடுத்து, பொதுநல மனு தொடர்பாக ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்களும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P