Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு செய்துள்ள நகராட்சி நிர்வாகத்துறை, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை அறிவித்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
பொதுமக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அரசு நிர்வாகமே முறைப்படி செயல்படுத்த வேண்டும் என்றும், அதனை தனியாருக்கு ஒப்படைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாநகராட்சிகளில் குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும், தனியார் நிறுவனங்கள் பணிகளை முறையாக செயல்படுத்தவில்லை என பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிப்பதன் மூலம், தமிழகத்தில் நடைபெறுவது தவெக ஆட்சியா அல்லது தனியார்களின் ஆட்சியா என்ற கேள்வி எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam