Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய ஆறு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.
ஆனால் தற்போது இந்த ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பு வெறும் 5 டி.எம்.சி. அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரிகளில் சுமார் 9 டி.எம்.சி. தண்ணீர் இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல் நினோ பருவநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஏரிகளில் உள்ள நீர் வேகமாக ஆவியாவதே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சென்னை மக்களுக்கு தற்போதைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று நீர்வளத்துறை உறுதி அளித்துள்ளது. தேவையான அளவு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வரும் வடகிழக்கு பருவமழை தாமதமானாலோ அல்லது பொய்த்துப்போனாலோ சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே பருவமழை தொடங்கும் வரை பொதுமக்கள் அனைவரும் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b