திருவள்ளூர் அருகே ஏடிஎம் மெஷினையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்– ரூ.10 லட்சம் வரை பணம் இருந்ததாக தகவல்
திருவள்ளூர், 05 செப்டம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு, கூடப்பாக்கம் பகுதியில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஏடிஎம் மெஷின் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்தி
கொள்ளை


திருவள்ளூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு, கூடப்பாக்கம் பகுதியில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஏடிஎம் மெஷின் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர்கள், அங்கு ஏடிஎம் மெஷினே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி ஊழியர்கள், ஏடிஎம் மெஷின் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் பூந்தமல்லி துணை ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து, அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது, இயந்திரத்தில் துளையிட்டு பணத்தை எடுத்துச் செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வடமாநிலங்களில் நடைபெறும் முறையைப் போன்று ஏடிஎம் மெஷினையே கொள்ளையடித்துச் சென்றிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏடிஎம் மெஷினில் சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் சரியான மதிப்பு குறித்து போலீசார் மற்றும் வங்கி தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏடிஎம் மெஷினையே தூக்கிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P