2 மாதத்திற்குள் மூடுவதாக உறுதியளித்தும் டாஸ்மாக் கடை மூடப்படவில்லை,பொதுமக்கள் முற்றுகை – போலீசாருடன் தள்ளு முள்ளு
அரியலூர், 05 செப்டம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார
போராட்டம்


அரியலூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இரண்டு மாதங்களுக்குள் கடையை மூடுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் விதித்த 60 நாள் கெடு முடிந்தும் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடையை மூடக்கோரி ஊர்வலமாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் அமைத்திருந்த இரும்புத் தடுப்பை அகற்றி, டாஸ்மாக் கடையை நோக்கி முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம், இல்லையெனில் போலீசார் எந்த வழக்குப் பதிவு செய்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam