தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் - முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கவிதா கேள்வி
ஐதராபாத் , 05 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானாவில் தனியார் மற்றும் கார்ப்பரேட் பள்ளிகளில் தன்னிச்சையாக உயர்த்தப்படும் கட்டணங்களை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்
A


ஐதராபாத் , 05 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானாவில் தனியார் மற்றும் கார்ப்பரேட் பள்ளிகளில் தன்னிச்சையாக உயர்த்தப்படும் கட்டணங்களை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், பள்ளிக் கட்டணத்தை கட்டுப்படுத்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘ஸ்கூல் பீ ரெகுலேட்டரி கமிஷன்’ அமைக்கப்படும் என்று ஏற்கனவே அரசு உறுதி அளித்திருந்தது. இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், அது ஏன் இன்னும் அமைச்சரவையை விட்டு வெளியே வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வித்துறையை தன்னிடமே வைத்துள்ள முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பள்ளிக் கட்டண உயர்வால் பெற்றோர்களின் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்படுவதை ஏன் கண்டுகொள்ளவில்லை என்றும் கவிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசு நிலத்தில் இயங்கி வரும் ஐதராபாத் பப்ளிக் பள்ளியிலும் கட்டணங்கள் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற செயல்களை அரசு தடுக்காமல் இருப்பது, கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற நிலையை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

1994-ம் ஆண்டு அரசாணையின்படி பள்ளிகளின் ஆண்டு கட்டண உயர்வு 5 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதிமுறையை மீறி பல பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தி வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார்.

எனவே, வரவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே பள்ளிக் கட்டண கட்டுப்பாட்டு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கவிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA