Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 06 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவையில் காலியாக உள்ள 3 இடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுடுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகி இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக மகேஷ் குமார் கவுடின் 2 ஆண்டு பதவிக்காலம் வருகிற 15-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அவரை அமைச்சரவையில் சேர்த்துவிட்டு, கட்சிக்கு புதிய மாநில தலைவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மகேஷ் குமார் கவுடுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகேஷ் குமார் கவுடுக்குப் பதிலாக புதிய மாநில காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
இந்தப் பதவிக்கான போட்டியில் மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் மற்றும் மகபூபாபாத் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாலராம் நாயக் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரை புதிய பி.சி.சி. தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையே, அமைச்சரவையில் காலியாக உள்ள 3 இடங்களை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் கட்டம் பிரசாத் குமார், மூத்த தலைவர் மற்றும் அரசு ஆலோசகர் சுதர்சன் ரெட்டி, மேலவை உறுப்பினர் விஜயசாந்தி, நலமாத பத்மாவதி ரெட்டி ஆகியோரின் பெயர்களும் அமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சட்டமன்ற தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அவரது சகோதரர் கோமட்டிரெட்டி வெங்கட ரெட்டி ஏற்கனவே அமைச்சராக இருப்பதால், ராஜகோபால் ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் காங்கிரஸ் மேலிடம் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்-மந்திரி பட்டி விக்ரமார்க்கா, அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி மற்றும் மகேஷ் குமார் கவுட் ஆகியோரையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 3 பேரின் பெயர்களும், மகேஷ் குமார் கவுடுக்குப் பதிலாக புதிய பி.சி.சி. தலைவராக நியமிக்கப்பட உள்ளவரின் பெயரும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தெலங்கானா காங்கிரஸ் அரசியலில் அடுத்த சில நாட்களில் பரபரப்பான மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA