Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 07 செப்டம்பர் (ஹி.ச.)
டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கு பொறுப்பாகக் கருதப்படும் டெல்லி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் தெற்கு மண்டல துணை ஆணையர் ராக்கேஷ் குமார், கண்காணிப்பு பொறியாளர் ரண்வீர் சிங், கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் லலித் குமார் கோயல், உதவிப் பொறியாளர் சுனில் சவுகான் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் அடங்குவர்.
சத்ய நிகேதன், டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் PG மற்றும் விடுதிகளில் தங்கி வரும் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. 1960-களில் உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளில் குடியிருப்புகள் பல மாடி PG விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடம் பல ஆண்டுகள் பழமையானது என்றும், மாணவர்கள் தங்கும் தனியார் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் தரைத்தளத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும், மழையால் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை கட்டிடத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கட்டிடத்திற்கு அனுமதிக்கப்பட்ட கட்டுமான அளவைவிட அதிகமான மாடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும், கட்டிட விதிமுறைகள் மீறப்பட்டிருந்ததாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தகவல்களின்படி, கட்டிடத்துக்கு முறையான அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு அனுமதியும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், பல ஆண்டுகளாக நடந்த கட்டுமான விதிமீறல்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பில் எப்படி தப்பின? மாணவர்கள் தங்கும் கட்டிடங்களின் பாதுகாப்பு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டனவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விபத்துக்குப் பிறகு அருகில் இருந்த மற்றொரு ஆபத்தான கட்டிடமும் காலி செய்யப்பட்டு, இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அந்தக் கட்டிடம் குடியிருப்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நான்கு மாடிகளுக்கு மேல் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை உடனடியாக அடையாளம் கண்டு சீல் வைக்கும் நடவடிக்கையையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P