மர்மமான முறையில் காகங்கள் உயிரிழப்பு - காரணத்தை ஆராயும் கால்நடைத்துறை!
திருநெல்வேலி, 07 செப்டம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சில காக்கைகள் மயக்க நிலையில் காணப
Crow


திருநெல்வேலி, 07 செப்டம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில காக்கைகள் மயக்க நிலையில் காணப்படுவதாகவும், தொடர்ந்து சில காக்கைகள் உயிரிழந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த காக்கைகளின் இறப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில், அவற்றின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக காக்கைகள் உயிரிழந்துள்ளனவா அல்லது ஏதேனும் நோய் தாக்கம் காரணமா என்பது உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN