Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைத் திட்டமிட்டு பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
5G அலைக்கற்றை மற்றும் அதிவேக இணையச் சேவை இன்றைய சூழலில் மாணவர்கள், இளைஞர்கள், கிராமப்புற சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளின் அன்றாடத் தேவையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் BSNL-ன் 5G சேவையைத் தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G சேவையை விரிவுபடுத்த அனுமதிக்கும் ஒன்றிய அரசு, BSNL-க்கு தேவையான நவீன கருவிகள், நிதி மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
BSNL-ஐ வலுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டே, சந்தைப் போட்டியில் இருந்து அந்நிறுவனத்தை அப்புறப்படுத்த முயல்வது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பச்சைத் துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தனியார் பெருமுதலாளிகளின் லாபத்திற்காக BSNL-ஐ பலவீனப்படுத்தும் முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், BSNL 5G சேவை தாமதத்திற்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புறங்களில் தரமான அதிவேக BSNL 5G சேவையைத் தொடங்குவதற்கான உறுதியான காலக்கெடுவை ஒன்றிய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ